“அடுத்த பிறவி என்று ஒன்று இருக்குமேயானால் அப்பிறவியில் நான் தோட்டியாகப் பிறக்க விரும்புகிறேன்” என்று காந்தி சொன்னார். கையால் மலம் அள்ளுதல் உள்ளிட்ட துப்புரவு வேலைகளை சமூகத்தின் உயர்ந்த பணி என்று காந்தி கூறினார். ‘மனிதக் கழிவை அகற்றுவதை மாண்புமிக்க பணி’ என்று காந்தி கருதியதாலேயே சமூகத்தில் எல்லோரும் அப்படி நினைப்பார்கள் என்று கற்பனை செய்தார். அவருடைய ஆசிரமத்தில் ஒரு பார்ப்பனப் பையன் கழிப்பறையைத் தூய்மை செய்யும் வேலையை மகிழ்ச்சியுடன் செய்வதாகக் கூறி வருணாசிரமத்திற்குப் புது விளக்கமளித்து ஏமாற்ற முயன்றார், காந்தியார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினரே, தோட்டிகள் என்கிற மனிதக் கழிவை அகற்றும் பணி செய்யும் பிரிவினரை இழிந்தவராகக் கருதுகின்றனர். தீண்டாமையின் உச்சக் கட்டக் கொடிய வடிவமான மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் இழிநிலை இந்தியா சுதந்தரம் பெற்று 63 ஆண்டுகளுக்குப் பின்னும் நீடிப்பது வெட்கக்கேடாகும்.
1993ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ‘மனிதக் கழிவை மனிதரே அகற்றுமாறு செய்வது, உலர் கழிப்பறைகள் கட்டுவது - தடுப்புச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது. உலர் கழிப்பறைகளை நவீன கழிப்பறைகளாக மாற்றுவதற்கு அரசு மானியம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் பணத்தைக் கொண்டு, ‘மனிதக் கழிவை மனிதரே அகற்றும் கொடுமையை ஒழிப்போம்’ என்று ஊடகங்களில் விளம்பரம் செய்யப்பட்டது. சில சிற்றூர்களில் தண்ணீர் வசதிக்கோ, பராமரிப்பு வசதிக்கோ ஏற்பாடு செய்யாமல் கழிப்பிடக் கட்டடங்கள் கட்டப்பட்டுப் பணம் பாழடிக்கப்பட்டது. சிற்றூர்களில் 90 விழுக்காட்டினர் திறந்த வெளிகளில் மலம் கழிக்கும் நிலை இருக்கும்போது, இத்தகைய கழிப்பிடங்கள் கட்டப்படுவதைக் கண்டு மக்கள் மனம் குமுறினர்.
மனிதக் கழிவை மனிதர் அகற்றுவதற்கான தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பத்து ஆண்டுகளுக்குப் பின்னும், இலட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை எதிர்த்து மனித உரிமை அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் 2003ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தன. எனவே, மனிதக் கழிவை மனிதர் அகற்றும் நிலை குறித்து மாநில அரசுகள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
இதில் முதல் குற்றவாளி இந்திய இரயில்வே துறையாகும். பெரு நகரங்களில் தொடர்வண்டி நிலையங்களில் மனிதக் கழிவை மனிதரே அகற்றும் அவல நிலை இன்றும் இருக்கிறது. சென்னை சென்ட்ரல் நிலையத்தில் குடலை முறுக்கும்படியான கொடிய நாற்றமடிக்கிறது. தொடர்வண்டிகளில் கழிப்பறைக் கழிவுகள், நிலையங்களில் கீழே விழாதவாறு நவீன வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறான வசதிகள் பல நாடுகளில் செய்யப்பட்டுள்ளன.
உத்திரப்பிரதேச அரசு அம்மாநிலத்தில் மனிதக் கழிவை மனிதர் அகற்றும் நிலை இருக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் தம் மாநிலத்தில் இந்நிலை இல்லை என்று தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டிலும் பல இடங்களில் மனிதக் கழிவைத் தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்கள் அகற்றுவதை ‘தலித் முரசு’ போன்ற இதழ்கள் படங்களுடன் வெளியிட்டுள்ளன.
உ.பி, பீகார், உத்தர்கண்ட் உள்ளிட்ட வட இந்தியாவில் ஆறு மாநிலங்களில் 2004 ஆம் ஆண்டு 6 இலட்சம் உலர் கழிப்பறைகள் இருந்தன. இவை இப்போது 2.4 இலட்சமாகக் குறைந்துள்ளன என்று நடுவண் அரசின், வீட்டுவசதி மற்றும் நகர வறுமை ஒழிப்புத் துறைக்கான அமைச்சகம் அறிவித்துள்ளது. மனிதக் கழிவை மனிதர் அகற்றுவதை ஒழிப்பதற் கான தலித் அமைப்பு (Safai Karmacharis Amdolan - SKA) பத்து ஆண்டுகளுக்கு முன்பு 13 இலட்சமாக இருந்த மனிதக்கழிவை அகற்றும் தலித்துகளின் எண்ணிக்கை இப்போது 3 இலட்சமாகக் குறைந்துள்ளது எனக்கூறி உள்ளது. இந்த அமைப்பு இந்தியாவில் பல பகுதிகளிலிருந்தும் இந்த இழிதொழிலிலிருந்து விடுபட்ட தலித்துகளைத் திரட்டி 1.11.2010 அன்று தில்லியில் பேரணி நடத்தியது.
அரியானா மாநிலத்தில் 2010 மே மாதத்தில் அம்பாலா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன், வாழ்நாள் முழுவதும் மனிதக் கழிவை அகற்றும் தொழில் செய்து வந்த தலித்துகள் 60 பேர் தாம் பயன்படுத்திய மலம் தூக்கிச் செல்லும் கூடைகளைத் தீயிட்டுக் கொளுத்தினர். இவர்களுக்கு ‘மறுவாழ்வு’ அளிக்கும் திட்டத்தின் கீழ் உள்ளாட்சிகளில் துப்புரவுப் பணியாளர்களாக இவர்கள் வேலையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
ஆனால் அய்ந்து மாதங்கள் கழித்து துப்புரவுப் பணியிலிருந்து இவர்கள் நீக்கப்பட்டனர். அம்பாலா மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.ஸ்ரோ, “மனிதக் கழிவை அகற்றி வந்த 200 பேருக்கு மாதம் ரூ.4,400 சம்பளத்தில் உள்ளாட்சியில் துப்புரவுப் பணியாளர் வேலை கொடுத்தோம். மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இந்த வேலை தரப்பட்டது. ஆனால் அவர்கள் துப்புரவுப் பணியை ஒழுங்காகச் செய்யவில்லை. எனவே அவர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டோம்” என்று கூறினார். (தி இந்து 26.10.10). மனிதக் கழிவை அகற்றுவோருக்கான மறுவாழ்வுத் திட்டம் வேண்டா வெறுப்பாக மேல்சாதி அதிகார வர்க்கத்தால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
நகரங்களில் வீடுகளில் உள்ள உலர் கழிவறைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும். நகரங்களில் பல வீடுகளில் கழிவுத் தொட்டி அமைக்காமல், கழிவறையிலிருந்து மலம் தெருவில் உள்ள கழிவுநீர்க் கால்வாய்க்குச் செல்லுமாறு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. நகராட்சி நிருவாகம் இவற்றைக் கண்டறிந்து ஒழிக்க வேண்டும். நடுவண் அரசின் மனிதக் கழிவை அகற்றும் குடும்பங்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தை மாநிலங்கள் முறையாகச் செயல்படுத்த வேண்டும். இக் குடும்பங்களின் பிள்ளைகளுக்குக் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் சிறப்புரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
இந்தியாவில் மனிதக் கழிவை மனிதர் அகற்றும் நிலையை 2007 திசம்பர் மாதத்திற்குள் ஒழிப்பதென ஒரு கால எல்லை அரசால் அறிவிக்கப்பட்டது. பிறகு இது மார்ச்சு 2009, மார்ச்சு 2010 என நீட்டிக்கப்பட்டது. 25.10.10 அன்று சோனியா காந்தி தலைமையில் கூடிய தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் 2012ஆம் ஆண்டிற்குள் மனிதக் கழிவை மனிதர் அகற்றும் நிலையை அரசு ஒழித்திட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
மாநகரங்களில் பாதாளச் சாக்கடைகளில் கழிவுகளை அகற்றும் பணியில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தப் பணிக்காகப் பாதாளச் சாக்கடையில் இறங்கும் போது விஷவாயு தாக்கிப் பலர் இறக்கின்றனர். இது குறித்து சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இப் பணியில் இனி மனிதர்களை ஈடுபடுத்தமாட்டோம்; எந்திரங்கள் மூலமாக இப்பணி செய்யப்படும் என்று தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் உறுதி கூறப்பட்டது. ஆயினும் அதன்பிறகும் பாதாளச் சாக்கடையில் கழிவை அகற்றும்போது சிலர் இறந்தனர். எனவே நாராயணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தமிழக அரசு மீது தொடர்ந்தார். 7.12.10 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நேர்நின்று அய்.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர் விளக்கமளித்துள்ளனர். சாக்கடைப் பராமரிப்புப் பணிகள் தொடர்பாக இன்னும் 4 வாரத்துக்குள் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். (தினத்தந்தி 7.12.10)
மனிதக் கழிவை மனிதர் அகற்றும் இழிநிலை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். மாநகராட்சிகளில் பாதாளச் சாக்கடைகளில் கழிவுகள் எந்திரங்கள் மூலம் மட்டுமே அகற்றப்படும் நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்தியா முழுவதும் துப்புரவுப் பணியாளர்களாகத் தாழ்த்தப்பட்ட மக்களே இருக்கின்றனர். சாதி அமைப்பும் அதன் ஒடுக்கு முறையும் அப்படியே நீடிக்கின்றன என்பதற்கு இது தக்க சான்றாகும். துப்புரவுப் பணியை உடல் நலத்திற்கு ஊறுவிளைவிக்காத வகையில் நவீனப்படுத்த வேண்டும்.
நன்றி : கீற்று இணையதளம்
No comments:
Post a Comment