Monday, November 15, 2010

ஆ.இராசா மீது அநியாயமான தாக்குதல்கள் காரணம்

1. விலை மதிப்பற்ற 2ஜி அலைக்கற்றையை, ஸ்பெக்ட்ரத்தை, ஏல முறை இல்லாமல் வரிசையில் வந்து, மெகாஹெர்ட்ஸுக்கு இத்தனை காசு என்று கொடுத்து வாங்கிச் செல்லலாம் என்று சொன்னார். இதனை நிதி அமைச்சகமும் சட்ட அமைச்சகமும் எதிர்த்தன. ஆனாலும் இப்படித்தான் செய்வேன் என்று திட்டவட்டமாகச் செய்தார். (இப்போது துறைச் செயலர் ஒருவரும் இதனை ஏற்க மறுத்ததாகச் செய்தி வந்துள்ளது.)

2. அத்துடன், இறுதி தினம் எதுவோ அதற்குச் சில நாள்கள் முன்னதாகவே ஸ்பெக்ட்ரம் விற்பனையை முடித்துக்கொள்வதாக அறிவித்தது.

3. (1)-ல் சொல்லப்பட்ட காரணத்தால் கணக்கர்கள் கணிப்பில், இந்தியாவுக்கு ஏற்பட்ட நஷ்டம் 1,75,000 கோடி ரூபாய். (2)-ல் சொல்லப்பட்டதை வைத்துப் பார்க்கும்போது, வேண்டுமென்றே சிலருக்குச் சாதகம் செய்ய, பிறருக்குப் பாதகம் செய்ய, முன்கூட்டியே தகவலைச் சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு, தேதியையும் முன்தள்ளி வைத்துவிட்டார்.

4. இதன்படி, ஒருசில கம்பெனிகள் சட்டுப்புட்டென்று காசு கொடுத்து ஸ்பெக்ட்ரம் வாங்கிவிட, அதே நிறுவனங்களில் அந்நிய நிறுவனங்கள் ஏகப்பட்ட பணத்தைச் செலுத்தி பங்குகளை வாங்கியுள்ளன. இதிலிருந்தே ஊழல் நடந்துள்ளது என்று தெரியவில்லையா

ஆ.இராசா ஊழல் செய்யவில்லை என்று நான் அடித்துச் சொல்லவில்லை. ஆனால் அவர் ஊழல் செய்துள்ளார் என்பதற்கு எந்தவிதத்திலும் தெளிவான சாட்சியம் இப்போதைக்கு இல்லை என்றுதான் சொல்கிறேன். நம் மக்கள் எப்படி அபத்தமாக இதைப் புரிந்துகொள்கின்றனர் என்பதற்கு சில மாதிரிகளைப் பார்ப்போம்.
-
இந்திய அரசுக்கு 1,75,000 கோடி ரூபாய் இழப்பு என்று கணக்கீட்டாளர் சொல்கிறார். இதையே உண்மையா என்று நாம் கேள்வி கேட்கவேண்டும். அதற்குள்ளாக, அது, ஆ.இராசா 1,75,000 கோடி ரூபாயை அமுக்கிவிட்டார் என்று மாறுகிறது! இரண்டும் ஒன்றா? இந்த ‘மாயப்பணம்’ இருப்பதுபோலவும் அது அரசின் கஜானாவிலிருந்து மந்திரமாக ஆ.இராசாவின் பைக்குள் (அல்லது திமுக பைக்குள்) போனதுபோலவும் சொல்லப்படுகிறது. ஒருவர் எழுதுகிறார்: அதில் ஒரு சிறு சதவிகிதத்தை மக்கள் நலத்துக்குப் பயன்படுத்தினாலும் போதுமே… ஆக, இல்லாத பணம் இருப்பதாக ஆகி, அதை எப்படிச் செலவழிப்பது என்றுகூட மக்கள் யோசித்துவிட்டனர்.ஆ.இராசா மட்டுமல்ல, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் சொத்தும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அதிகரித்துக்கொண்டே போகிறது. இது எனக்கும் கவலையையும் பயத்தையும் தருகிறது. கட்டாயம் இன்வெஸ்டிகேட் செய்யப்படவேண்டிய விஷயம்தான் இது. ஆனால் இந்தக் கொள்கை முடிவால் இராசா நிதிரீதியில் எப்படி லாபம் அடைந்துள்ளார் என்பதைக் காண்பிக்காவிட்டால் ஊழல் குற்றச்சாட்டு ருசுவாகாது

ஆனால் அரசுக்கு வரவேண்டிய பணத்தை இல்லாமல் பண்ணிவிட்டார் என்று இராசாமீது திறமைக்குறைவு என்ற குற்றச்சாட்டைக் கொண்டுவரலாம். அதை கேபினெட்டும் பிரதமரும் ஏற்றுக்கொண்டால், இராசாவைப் பதவிநீக்கம் செய்யலாம் அல்லது வேறு துறைக்கு மாற்றலாம். (கூட்டணிக் கட்சி அழும்பு பிடித்தால், அதை எப்படிச் சமாளிப்பது என்பது சோனியாவின், மன்மோகனின் பிரச்னை. நமக்குக் கவலை இல்லை.)

ஏன் நான் கணக்கீட்டாளர் கணக்கை ஏற்க மறுப்பேன்? 3ஜி ஏலம் நடந்தது. அப்போது இந்திய அரசுக்குக் கிடைத்த தொகை ரூ. 70,000 கோடி. 3ஜி என்பதைக் கொண்டு பல வித்தைகளைச் செய்யலாம். எனவே இவ்வளவு பணமாவது வந்தது. இருக்கும் ஸ்பெக்ட்ரத்தை ஒரு மெகாஹெர்ட்ஸுக்கு இத்தனை என்று பெருக்கி ஒரு கணக்கைக் கொடுப்பது அபத்தம். அதே ஸ்பெக்ட்ரத்தை 2ஜி ஏலம் என்று விட்டிருந்தால், அதிகபட்சம் 10,000 கோடி ரூபாய்க்கு மேல் கிடைப்பது கடினம். ஏனெனில் ஏற்கெனவே ஏகப்பட்ட கம்பெனிகள் இந்தச் சேவையை அளித்துவந்தன. நிறையப் பணம் கொடுத்து லைசென்ஸ் வாங்கி, ஸ்பெக்டரம் வாங்கி இந்தத் துறைக்குள் நுழைந்தால் ஆரம்பத்திலேயே அந்த நிறுவனம் போண்டி ஆகவேண்டியதுதான்

தேதியை முன்னுக்குத் தள்ளிப்போட்டதில் ஏதேனும் கிரிமினல் நோக்கம் உள்ளதா, பணம் கைமாறினதா என்பதை சிபிஐதான் தீவிரமாகக் கண்டுபிடிக்கவேண்டும். ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் இது சாத்தியம்தானா என்பது சந்தேகமே. அந்த ஒரு காரணத்தாலேயே இராசா பணம் வாங்கியிருக்கிறார் என்று ஹேஷ்யமாகச் சொல்வது நியாயமற்றது. Where is the evidence?

கடைசியாக, ஸ்பெக்ட்ரம் பெற்ற நிறுவனங்கள் அனைத்துக்கும் வேல்யுவேஷன் அதிகமாகிவிட்டது என்ற குற்றச்சாட்டு…

இதில் என்ன பிரச்னை? வாங்கிய ஸ்பெக்ட்ரத்தை மற்றொருவருக்கு விற்று இந்த ‘இடைத்தரகர்கள்’ ஏகப்பட்ட பணம் பார்த்துவிட்டதுபோல, புரிதல் அற்ற மக்கள் எழுதுகின்றனர். இந்த மதிப்புகள் எல்லாம் பேப்பர் மதிப்புகள். புரமோட்டர்களுக்கு இன்னும் கைக்குப் பணம் வரவில்லை. நான் 1 லட்ச ரூபாய் போட்டு ஒரு நிறுவனம் தொடங்குகிறேன். ஒரு பங்கு ரூபாய் 10 என்று, 10,000 பங்குகள். 100 சதவிகிதப் பங்குகளும் என்னிடம். எனக்கு 1 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் கிடைக்கிறது. அதை வாங்க 20 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதை என் நிறுவனம், வங்கி ஒன்றிடம் கடனாக வாங்கித் தருகிறது என்று வைத்துக்கொள்வோம். ஸ்பெக்ட்ரம் கிடைத்தவுடன் ஒரு அந்நிய நிறுவனம், என் நிறுவனம் புதிதாக வெளியிடும் 10,000 பங்குகளை, பங்கு ஒன்றுக்கு 1,00,000 ரூபாய் என்று கொடுத்து (அதாவது மொத்தம் 100 கோடி ரூபாய் கொடுத்து) வாங்குகிறது. இப்போது இருவரிடமும் ஆளுக்கு 50% பங்குகள் உள்ளன. என்னிடம் இருக்கும் பங்குகளின் மதிப்பு இப்போது 100 கோடி ரூபாய். ஆனால் நான் முதலீடு செய்ததோ ஒரு லட்சம் ரூபாய். ஆனால் என் பங்கை உடனே யாரிடமாவது விற்று 100 கோடியைத் தள்ளிக்கொண்டு நான் ஓடிவிடமுடியுமா?

நிச்சயம் முடியாது. என் கம்பெனிக்குள் வந்திருக்கும் 100 கோடியைக் கொண்டு நான் டவர்கள் அமைத்து, சிம் கார்டுகள் விற்று, லாபம் சம்பாதித்து, கடனை அடைத்து, என்றாவது ஒரு நாள் என் பங்குகளை யாரிடமாவது விற்று, அல்லது நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட வைத்து, பொதுமக்களிடம் விற்று… என்று ஒரு பெரிய நீண்ட கதை.

யூனிநாரும் வீடியோகானும் இன்று எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கவேண்டும் தெரியுமா லாபம் பெற? பெருமுதலைகளான ஏர்டெல்லும் வோடஃபோனும் டாடாவும் ஐடியாவும் ரிலையன்ஸும் இருக்கும் துறையில் நிறையவே கஷ்டப்படவேண்டும், லாபம் செய்ய.

நம் மக்கள் கார்பரேட் ஃபினான்ஸ் பற்றி ஓரளவுக்காவது தெரிந்துகொண்டு இதைப்பற்றியெல்லாம் பேசினால் நன்றாக இருக்கும்.

மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஆ.இராசா மீது அநியாயமான தாக்குதல்கள்! ஆனாலும் நம் பார்வைக்கு இன்னும் வலுவான கேஸ் ஒன்று கட்டி எழுப்பப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன். சும்மாவாவது அடி அடி என்று ஒருவரைப் போட்டு அடிப்பது நியாயமல்ல. இதைப்பற்றி நான் முன்னமேயே எழுதியுள்ளேன். இராசா தவறே செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை. செய்தாரா இல்லையா என்று தெரியாது. ஆனால் செய்தார் என்பதற்கு வலுவான சாட்சியங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையே? இப்படிச் செய்ததால் இத்தனை கோடி இழப்பு என்றுதான் bean counter அக்கவுண்டண்டுகள் பேசுவார்கள். ஆனால் கொள்கை முடிவு எடுக்கும்போது இழப்பைப் பற்றிப் பேசவேண்டியதில்லை. தினம் தினம் பெட்ரோல் மானியத்திலும், உர மானியத்திலும் பல கோடிகள் ‘இழக்கிறது’ அரசு. அது விரும்பி இழக்கப்படும் தொகை.

செல்ஃபோன் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு ஏலம் இல்லாமல், குறிப்பிட்ட கட்டணத்துக்கு ஸ்பெக்ட்ரம் அளிக்கப்படும் என்று அரசு முடிவெடுத்தால் அதனால் ஏற்படுவதை இழப்பு என்று சொல்லக்கூடாது. அதனால்தான் இன்று இந்தியாவில் செல்ஃபோன் கட்டணம் இவ்வளவு குறைவாக உள்ளது. எண்ணற்ற ஏழை மக்கள் பயன் அடைகிறார்கள். (பணக்காரர்கள் பெரிதாக ஒன்றும் பயன்பெறுவதில்லை!) டாரிஃப் குறைந்தால் அதன் பயன் ஏழைகளுக்கே அதிகம் சென்றடையும். இத்தனை ஸ்பெக்ட்ரத்தையும் ஏலத்தில் விட்டால் 1,75,000 கோடி ரூபாய் அரசுக்குக் கிடைக்கும் என்று கேனையன் ஒருவன் கணக்கிட்டால், அதையும் அனைவரும் நம்புகிறீர்களே!
நாம் சுவாசிக்கும் காற்றை நாள் ஒன்றுக்கு தலைக்கு ஒரு ரூபாய் என்று வரிவிதித்தால், அரசு சம்பாதிக்கும் தொகை நாள் ஒன்றுக்கு நூறு கோடி. ஆண்டுக்கு 36,500 கோடி ரூபாய். அதை இலவசமாகக் கொடுத்து அத்தனை கோடியை இழந்த பிரதமர் மன்மோகன் சிங் ஊழல்காரர் என்றும் அடுத்து சொல்வார்கள்!
ஆ.இராசா குற்றவாளி என்று என்னை கன்வின்ஸ் செய்ய என்ன செய்யவேண்டும்? அவர் யாரிடம் எவ்வளவு லஞ்சம் பெற்றார் என்பதற்கான ஆதாரங்களைக் காட்டவேண்டும். இல்லை என்றால், இது விட்ச் ஹண்ட்

-

நவ 1 முதல் விரும்பிய செல்போன் சேவைக்கு அதே எண்ணுடன் மாறிக் கொள்ளும் வசதி!

கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும், விரும்பிய செல்போன் நெட்வொர்க்குக்கு அதே எண்ணுடன் மாறிக்கொள்ளும் வசதி, ஒரு வழியாக அடுத்த வாரம் நடைமுறைக்கு வருகிறது.

செல்போன் எண்ணை மாற்றாமல் வேறு செல்போன் நிறுவனத்தின் சேவைக்கு மாறிக் கொள்ளும் வசதியை கடந்த ஆண்டே அறிமுகப்படுத்தியது மத்திய தொலைத் தொடர்புத்துறை.

ஆனால், செல்போன் நிறுவனங்கள் பல, அதற்கான உயரிய தொழில்நுட்ப வசதி இல்லாமல் இருந்தன. எனவே, அவை அந்த வசதியைப் பெற கால நீட்டிப்பு செய்து கொண்டே இருந்தது மத்திய அரசும். இதுவரை கிட்டத்தட்ட 4 முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இப்போதுதான் ஒருவழியாக அனைத்து செல்போன் நிறுவனங்கள் தங்களை ‘அப்கிரேட்’ செய்து கொண்டுள்ளன.

நவம்பர் 1-ம் தேதி முதல் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்திருக்கிறார். முதற்கட்டமாக இது ஹரியாணாவில் மட்டும் அமலுக்கு வருகிறது

குறித்த செல்போன் நிறுவனம் வழங்கும் சேவை திருப்தி அளிக்கவில்லை என்றாலும் செல்போன் எண்ணை மாற்றிக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் தொடர்ந்து அதே நிறுவனத்தையே சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

இதையடுத்து, வேறு செல்போன் நிறுவனத்தின் சேவையில், ஏற்கெனவே இருக்கும் அதே செல்போன் எண்ணைப் பெற்றுக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்தது.

இதனை அறிமுகப்படுத்தினால், வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு, கட்டணக் குறைப்பு உள்பட பல வசதிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செய்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இதைத் தவிர்க்கவே பல நிறுவனங்கள் இந்த வசதியை தாமதப்படுத்தி வந்தன என்கிறார்கள் இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள்.

-

1 comment:

வில்லவன் கோதை said...

ஊடகங்களும் நாளிதழ்களும் அறிந்தே கூச்சலிடுகின்றன.வலைப்பூக்கள் வெளிப்படுத்த வேண்டிய ஞாயமான கருத்துக்களை உங்கள் குரல் எதிரொலிக்கிறது.மிக்க மகிழ்ச்சி பாண்டியன்ஜி
http://verhal.blogspot.com

Post a Comment