Saturday, October 30, 2010

ஃபேஸ்புக்கில் முகம் பார்க்கலாம்

இந்தியாவில் மொபைல் போனின் பயன்பாட்டிற்கு அடுத்தபடியாக அதிவேகமாக பரவிவரும் விஷயம், 'சோஷியல் நெட்வொர்கிங்' அல்லது சமூக வலைப்பின்னல் எனப்படும் இணையத்தளங்கள் ஆகும். இன்று 'மை ஸ்பேஸ்' 'ஆர்குட்' 'டிவிட்டர்' எனப்பல இணையத்தளங்கள் இருந்தாலும், பேஸ்புக் தான் எல்லாவற்றிலும் முதலாவதாய் திகழ்கிறது. இளைஞர்களிடையே இது வேகமாக பிரபலமாகியும் வருகிறது. இளைஞர்கள் மட்டுமல்லாது எல்லாத்தரப்பினரும் இவற்றில் உறுப்பினர்களாய் சேர்கிறார்கள். நம் நாட்டில் மொபைல் போனின் உபயோகத்திற்கு பிறகு அதிக வளர்ச்சி கண்டுள்ளது இதுபோன்ற இணையத்தளங்களே!இணைய வசதி பெற்றிருந்த கம்ப்யூட்டர் இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றிருந்த நிலைமாறி இன்று தயாரிக்கப்படும் மொபைல் போன்களில் பேஸ் புக் பயன்பாடு உள்ளடக்கியே விற்கப்படுகிறது, உலகம் முழுவதும்சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் பேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள் என்றும், நம்நாட்டைப் பொறுத்தவரை 80 இலட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள் எனவும் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர் 'மார்க் சூக்கர்பெர்க்' என்பவரால் விளையாட்டாக உருவாக்கப்பட்டது தான் இந்த பேஸ் புக்.

"என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு?" என்று தன்னை விட்டுப்போன பெண்ணிற்க்காக தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்காமல், காதலியின் நினைவிலிருந்து தன்னைக் காத்துக்கொள்வது எப்படி என்று என ஒருநாள் இரவு தீவிரமாய் யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் மார்க் சூக்கர்பெர்க்கிற்கு இந்த யோசனை பளிச்சிட்டது. அவர் படித்துக் கொண்டிருந்த பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் இருந்தது, அதாவது அங்கு படிக்கும் மாணவர்கள், பணிபுரியும் பேராசிரியர்கள் பற்றிய விபரங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை மனவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பல்கலைக்கழகம் கொடுத்துவந்தது. அந்த புத்தகத்தை பேஸ்புக் எனப் பெயரிட்டு மாணவர்கள் அழைப்பது வழக்கம் இந்த ஐடியவைத்தான் சூக்கர்பெர்க் எடுத்துக்கொண்டு சிந்திக்கத் தொடங்கினார். தன்னுடைய மாணவ நண்பர்களான எட்டுவர் டோ சவேரின், டாஸ்டின்மொச்கோவிட்ஜ், கிரீஸ்ஹ்யூக்ஸ் ஆகியோரை இணைத்த்துக்கொண்டு இணையத்தளம் ஒன்றைத் துவக்கினார். முதலில் தமது பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டு தளம் உருவாக்கப்பட்டது. கிடைக்கும் வரவேற்பை பொறுத்து விரிவு படுத்தலாம் என்பது மார்க்கின் திட்டம். இப்பொழுது 13 வயது நிரம்பியிருந்து ஒரு மின்னஞ்சல் முகவரி பெற்றிருந்தால் போதும் பேஸ்புக் உறுப்பினராகிவிடலாம். ஆம்! இன்று பள்ளி மாணவர்கள் வரையில் இந்த தளம் விரிவு படுத்தப்பட்டு நீள்கிறது.

'முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனதிப்போது' என்று காதல் தோல்வியால் பிதற்றாமல், உலகின் எந்த முனையில் இருக்கும் எந்த ஒரு நபரின் முகத்தைக் காணும் கண்ணாடியாக பேஸ் புக்கை இந்த இளைஞன் விளையாட்டை உருவாக்க, இந்த இணையத்தளம் இப்போது அவரை உலகப் பணக்காரர்களில் முக்கியமான ஒருவராக உருவாக்கி இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக 2009 ல் இலாபம் ஈட்டும் ஒரு நிறுவனமாக மாறினாலும் இதற்கு முன்னரே உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் இதன் மீது ஒரு கண் வைத்து விலைபேசி தன்னகப்படுத்த போட்டி போட்டன. சாப்ட்வேர் ஜாம்பவான் 'மைக்ரோ சாப்ட்' பெரும் முதலீடு செய்துள்ளது. வணிக ரீதியாக வெற்றிபெற்ற எம்.டி.வி.நிறுவனத்திற்கு இணையாக பேஸ்புக்கை வாங்குவதற்கு போட்டி எழுந்துள்ளது.

இன்றைக்கு கூட்டு செயல்பாடுகளிலிருந்து விலகிய மனிதனுக்கு தனக்கென ஒரு சமூக அமைப்பை, குழுவை உருவாக்கிக்கொள்ளத் தேவையான வசதிகளை இதுபோன்ற சமூக வலைப்பின்னல்கள் செய்கின்றன. தனிப்பட்ட பிரச்சனைகள் மட்டுமன்றி சமூகப் பிரச்சனைகளையும் இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

நம்நாட்டைப் பொறுத்தவரை கணினிகளின் பயன்பாடு தற்போதுதான் வளர்ந்து வருகிறது என்றாலும் மொபைல் போனின் பெருக்கம் ஆதிக்கம் பேஸ்புக் உறுப்பினர்களின் எண்ணிக்கையினை நாள்தோறும் அதிகப்படுத்திக் கொண்டு வருகிறது. இப்போது சுமார் முப்பது கோடி மொபைல் போன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது அடுத்த ஆண்டு அதாவது 2011 ல் அறுபது கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் வெறுமனே பத்து சதவீதம் பேர் பேஸ்புக்கைப் பயன்படுத்தினால் கூட சுமார் ஆறு கோடி பேர் என்று உலகின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் இந்தியர்களின் பங்கு கணிசமானதாக உயர்ந்திருக்கும். உலகின் மற்ற நாடுகளை எல்லாம் பின்தள்ளி விட்டு இந்தியர்கள் இதை ஆக்கிரமிக்கப் போகிறார்கள் என்பது நிச்சயம். அதனால் தான் இந்தியாவை இலக்காகக் கொண்டு இந்திய மொழிகளில் தமிழ் மட்டுமல்லாது பஞ்சாபி, பெங்காலி, தெலுங்கு, மற்றும் மலையாளம் என்று பேஸ்புக் இன்று வலம் வருகிறது. விரைவில் வேறு சில இந்திய மொழிகளும் பேஸ்புக்கில் இடம் பெறலாம். அந்த நோக்கில் தான் ஆசியாவிலேயே முதலாவதாக ஐதராபாத்தில் தனது அலுவலகத்தைத் திறக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

தன்னைத் தொலைத்த தந்தையை 37 ஆண்டுகளுக்கு பிறகு தனயன் பேஸ்புக் மூலம் கண்டுபிடித்தான்.

தன் மின்னஞ்சல் முகவரியினை எழுதி கண்ணாடி பாட்டிலில் அடைத்து கடலில் வீசி, அதை 33 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுத்த நபர் தொலைபேசியில் தொடர்புகொண்டு நட்பு பாராட்டிக்கொண்டிருப்பதெல்லாம் நம்மை வியப்பிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தினாலும்,"தன் பிள்ளைகள் பேஸ் புக்கில் தொலைந்து போய்விடக்கூடது" என்று அமெரிக்காவின் முதல் பெண்மணி மிச்சிலி ஒபாமா அஞ்சுவதைப் போல நாம் அனைவருமே கொஞ்சம் கவனமாய் இருப்பது நலம்.

பொதுவாக பேஸ்புக் உபயோகிபபவர்களாகிய நாம், நம் பிள்ளைகள் கீழ் கண்டவற்றில் கவனமாய் இருப்பது மிக அவசியம்.

  • நண்பர்களாக வருபவர்களின் உரையாடல் நல்ல முறையில் இருக்கிறதா என்பதை உணர வேண்டும்.
  • நமக்கு வேண்டாம் என்று ஒதுங்கி விட்டாலும், நம்மைப் பற்றிய தகவல்கள், புகைப் படங்கள், தொலைபேசி எண்கள் ஆகியவை நீக்கமுடியாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளதால், எனவே தனிப்பட்ட தகவல்களை பதியும் முன் நன்கு யோசித்து செய்யவேண்டும்.
  • பதிவிறக்கம் (download)செய்ய முடியாத படங்களைக் கூட நகல் எடுத்து முறைகேடாக பயன்படுத்தப் படுவதால், படங்களுக்கு உரிய privacy settings கொண்டு பாதுகாக்கவேண்டும்.
  • நமக்கு நன்கு தெரிந்த நண்பர்களோ அல்லது உறவினர்களோ அல்லாது பிறர் மூலம் வரும் அழைப்பினை நிராகரிக்கத் தயங்கவேண்டாம்.
  • நமக்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து அழைப்புகளில், பாலியல் தொடர்பான உரைகளோ அலது ஏதும் மிரட்டல்களோ இருந்தால் உடனடியாக பெற்றோர் மூலம் காவல் துறையிடம் முறையிடத் தயங்கவேண்டாம்.

கூர்மையான கத்தியினை ஆக்கப் பூர்வமாக தேவைகளுக்கு மிக மிக கவனத்துடன் எப்படி பயன்படுத்துகிறோமோ அதேபோல் நன்மையையும் தீமையும் கலந்த தொழில்நுட்பத்தினை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்.

No comments:

Post a Comment